திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அதற்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியது. இதற்கான காலக்கெடு கடந்த மாதம் 31ம் ேததியுடன் முடிவடைந்தது. ஆனால் அன்புமணி பதிலளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 3ம் தேதி ராமதாஸ் தலைமையில் கூடியது.
நடந்த இக்கூட்டத்தில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க அனைவரும் வலியுறுத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவால் பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை குறித்தும், அன்புமணி மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே கொடுத்த கெடுவுக்கு அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை என்பதால் நிர்வாக குழு மேலும் ஒருவார காலம் அவகாசம் கொடுக்கலாம் என முடிவெடுத்தது.
அதன்படி 2வது கட்டமாக செப். 10ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் அறிவித்திருந்தார். தந்தையின் கெடுவுக்குள் பதில் தருவேன் என முதலில் கூறிய அன்புமணி, எதுவும் கூறாமல் உள்ளார். இந்நிலையில் ராமதாஸ் விதித்த 2வது காலக்கெடு இன்றுடன் முடிய உள்ளது.
எனவே இன்று அன்புமணி பதில் அளிக்காத பட்சத்தில், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தபின் நாளை (11ம் தேதி) வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பின்போது அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிடவும், பாமகவுக்கு புதிய செயல் தலைவர் யார் என்பதை அறிவிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.