இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் என்று அறிவித்த அண்ணாமலைக்கு நயினார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம்: டெல்லி தலைமைக்கும் புகார் தெரிவித்தனர்
சென்னை: கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்த அண்ணாமலைக்கு நயினார் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி தலைமைக்கும் புகார் அளித்தனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ எந்த பதவியும் வழங்கப்படவில்லை. முன்னாள் தலைவர் என்ற முறையிலேயே பாஜவில் இருந்து வருகிறார்.
தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து பாஜ சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பெரிதாக பங்கு பெறுவது இல்லை. இந்த நிலையில் கரூரில் நடந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கரூர் பாஜ சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்’’ என்று திடீரென அறிவித்தார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கும் போது, அண்ணாமலை எப்படி இது போன்று எப்படி அறிவிக்க முடியும் என்று பாஜவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை தலைவராக இருக்கும் போது நான் மட்டும் தான் பேட்டியளிப்பேன். நான் சொல்வது தான் கட்சியின் கருத்து. மற்ற தலைவர்கள் சொல்வது அவர்களின் சொந்த கருத்து என்று தெரிவித்து வந்தார்.
இப்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாத அண்ணாமலை எப்படி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர். அண்ணாமலையின் தனிப்பட்ட அறிவிப்பு தொடர்பாக டெல்லி தலைமைக்கும் புகாராகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.