ராணிப்பேட்டை: அடுத்த மாதம் முதல் விடுபட்ட மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று ராணிப்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சி சமத்துவபுரம் பகுதியில் புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, மகளிர் திட்டம், வருவாய் பேரிடர் மேலாண்மை, நுகர்வோர் பாதுகாப்பு, தொழிலாளர்கள் நலன், தாட்கோ, வேளாண்மை பொறியியல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை, கூட்டுறவு ஆகிய துறைகள் சார்பில் மொத்தம் 72 ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு ரூ.296.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து ரூ.24.34 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் ரூ.42.17 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியாவே திரும்பி பார்க்கிற அளவுக்கு பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர். 2 வருடம் முன்பு செப்டம்பர் 15ம் தேதி மகளிர் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றினார். இத்திட்டம் மூலம் 1 கோடியே 20 லட்சம் மகளிர் பயன்பெறுகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 1லட்சத்து 70ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர்.
டிசம்பர் மாதம் முதல் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பாராட்டி சென்றுள்ளனர். பல வகையில் இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டு மாநிலமாக, முதலமைச்சராக நமது மாநிலத்தை முதல்வர் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்பி, எம்.எல்.ஏக்கள் ஈஸ்வரப்பன், முனிரத்தினம், கலெக்டர் சந்திரகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராணிப்பேட்டை நகராட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காமராஜர் தங்கியிருந்த வீட்டை(காமராஜர் நினைவகம்) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். பின்னர் நகராட்சி வளாகத்தில் உள்ள கோயிலில் மணமக்கள் சரண்- ராஜகுமாரிக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர். ஆற்காடு- கலவை சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பார்வையிட்டார். பின்னர் ஆற்காடு திமுக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பிற்பகலில் வேலூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து காட்பாடி சேவூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
 
 
 
   