பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி, ராஜாபுரம் புதூரை சேர்ந்தவர் பழனியப்பன் (55). கொத்தனார். மனைவி விஜயா (43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகள், மகனுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். மற்றொரு மகள் தனலட்சுமி (23) திருமணம் ஆகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. மகள் உடல்நலம் சரியாகாததால் பழனியப்பன் வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில், விஜயா தனது மகன் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். வீட்டில் பழனியப்பன், தனலட்சுமி மட்டும் இருந்தனர். திருச்செந்தூர் சென்றவர்கள் செல்போனில் பழனியப்பனை தொடர்பு கொண்டனர்.
அவர் போனை எடுக்காததால் நேற்று காலை பக்கத்து வீட்டுக்காரர்களை தொடர்பு கொண்டு, போனை பழனியப்பனிடம் தருமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் பழனியப்பனின் வீட்டிற்கு வந்துபார்த்த போது தனலட்சுமி சடலமாகவும், பழனியப்பன் தூக்கில் தற்கொலை செய்து கொண்டும் கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில், மகளை கொன்று விட்டு பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.