Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாலியல் வன்கொடுமை குற்றவாளி தஷ்வந்த் விடுதலை.. நீதியை நம்பும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்: எஸ்டிபிஐ கருத்து!!

சென்னை: பாலியல் வன்கொடுமை குற்றவாளி தஷ்வந்தை விடுவிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், நீதியை நம்பும் முழு சமூகத்திற்கும் பெரும் ஏமாற்றமாகும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை போரூரில் 2017ஆம் ஆண்டு 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐகோர்ட்டால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த், சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆதாரங்களில் உறுதியின்மை என்ற காரணத்தைக் காட்டி இத்தகைய கொடூரக் குற்றவாளியை விடுவிப்பது, நீதித்துறையின் செயல்பாடு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ ஆய்வுகளில் உறுதியின்மை இருப்பதாகக் கூறி, வன்கொடுமை செய்து ஒரு சிறுமியின் உயிரைப் பறித்த குற்றவாளியை விடுவிப்பது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், நீதியை நம்பும் முழு சமூகத்திற்கும் பெரும் ஏமாற்றமாகும். போரூர் சம்பவம் ஒரு தனிமனிதக் குற்றம் மட்டுமல்ல; இது சமூகத்தின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் சிதைக்கும் செயலாகும். நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் ஆதாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு வழங்குவது, பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான குரலை அடக்குவதற்கு ஒப்பாகும்.

இத்தகைய தீர்ப்புகள் குற்றவாளிகளைத் தைரியப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கு தடையாகவும் அமைகின்றன. ஆதார சேகரிப்பு முறையில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யாமல் குற்றவாளிகளை விடுவிப்பது, நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சிறுமியின் உயிர், அவளது குடும்பத்தின் துயரம், சமூகத்தின் கோபம் ஆகியவற்றை ஆதாரமின்மை என்ற ஒற்றை வார்த்தையால் துடைத்தெறிய முடியாது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும், சமூகத்தின் நம்பிக்கையையும் உறுதிப்படுத்த, இதுபோன்ற வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளும், ஆதார சேகரிப்பில் துல்லியமும் அவசியமாகிறது. தஷ்வந்த் போன்றவர்கள் விடுதலை செய்யப்படுவது, நீதியை நம்பி வாழும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமாகும். ஆகவே, இந்தத் தீர்ப்பு உடனடியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், எந்த வகையிலும் குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.