சென்னை: திருப்பரங்குன்றம் தர்ஹா பற்றி அவதுறு பதிவு, மதமோதலை ஏற்படுத்த முயன்றதாக பாஜ மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி (40). பாஜ ஆன்மிக பிரிவு மாநிலச் செயலாளராக உள்ளார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தர்ஹா குறித்தும் பிரச்னை ஏற்படும் விதமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நம்புதாளையில் அவரது வீட்டில் வைத்து குருஜியை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், பாஜ சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்திற்கு நிர்வாகிகளுடன் சென்றுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஆற்காடு டவுன் போலீசில் மேல்விஷாரம் நலச்சங்க நிர்வாகி நிஷாத் அஹமத் கடந்த மாதம் 29ம் தேதி அளித்த புகாரில் இஸ்லாமிய சமுதாயத்திற்கிடையே மோதலை தூண்டும் வகையிலும் அனைத்து கட்சிகளின் மோதலை ஏற்படுத்தும் வகையிலும் பேசுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் மேல்விஷாரம் செல்வதற்காக வந்த வேலூர் இப்ராஹிமை ஆற்காடு பாலாறு பழைய பாலம் அருகே ராணிப்பேட்டை போலீசார் தடுத்து நிறுத்தி அவரையும் நிர்வாகிகள் 3 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


