திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ கூட்டணிக்குள் வர வேண்டாம், வெளியிலிருந்து திமுக வெறுப்பு அரசியலை தீவிரமாக பரப்புங்கள் என்பது தமிழ்நாட்டில் பலருக்கு கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டம். விஜய்க்கும் அந்த செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய்யை கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்பது பாஜ மற்றும் அதிமுகவின் நோக்கம் அல்ல. திமுகவை வீழ்த்த வேண்டும், சிறுபான்மை வாக்குகளை பிரிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். திமுக மீது தாக்குதல் தொடுக்க அனைத்து வகையிலும் விஜய்க்கு துணையாக இருப்பார்கள்.
மணிப்பூர் கலவரம் குறித்து பேசுவதற்கு கூட அனுமதிக்காதவர்கள் கரூருக்கு ஓடோடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு முறையாக இயங்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் பாஜ அரசியல் செய்ய தான் குறியாக இருக்கிறது. ஆறுதல் கூறுவதை விட மற்றவர்கள் மீது பழி போடலாம் என பார்க்கிறார்கள். விஜய்யும் அவ்வாறு கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. அவர் ஆபத்தான அரசியல் செய்கிறார். ஆபத்தானவர்கள் கைகளில் சிக்கி கொண்டுள்ளார். பாஜ தங்கள் கொள்கை எதிரி என விஜய் பேசுகிறார். பாஜ அவ்வாறு பேச சொல்லி உள்ளார்கள். அவர்கள் சொன்னதை தான் அவர் பேசி வருகிறார்.
பாஜ கொள்கை எதிரி என கூறிக்கொண்டு திமுகவை தான் விமர்சனம் செய்கிறார். இது ஆர்எஸ்எஸ், பாஜ செய்யும் சூழ்ச்சி. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பாஜவால் காலூன்ற முடியவில்லை. அதனால் எப்படியாவது குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி தமிழ்நாட்டில முறியடிக்கப்படும். யார் முறியடிக்கிறார்களோ இல்லையோ விசிக அதில் முன்னணியில் இருக்கும். விஜய் வெறுப்பரசியலை தான் பரப்புகிறார். அவரின் உரை உணர்ச்சியை தூண்டும் வகையிலும் ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் தான் உள்ளது. அவர் சினிமாவில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்வார். அதே போல அரசியலில் அவரின் இயக்குனரான பாஜ கூறுவதை செய்கிறார். விஜய் மனதில் கொஞ்சம் கூட ஈவு, இரக்கமில்லை. இப்படிப்பட்டவர்கள் கைகளில் தமிழ்நாடு சிக்கினால் என்னவாகும். ஆர்எஸ்எஸ்சில் இது போன்ற பயிற்சிகள் தான் வழங்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* பின்னணியில் ஆர்எஸ்எஸ்
‘கரூர் விவகாரத்திற்கு பின் விஜய் யார் என்கிற சாயம் வெளுத்து போய் விட்டது. விஜய் சுயமாக எதையும் சிந்திக்கவில்லை. ஆர்எஸ்எஸ் பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் தான் விஜய்யுடன் இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் செயல்படும் விஜய் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது தமிழ்நாட்டு மக்கள் அதை புறக்கணிப்பார்கள்’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.
* விஜய் மீது வழக்கு பதியாதது ஏன்?
திருமாவளவன் கூறுகையில், ‘கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல் துறை மெத்தனமாக செயல்படுகிறது. விஜய் மீது வழக்கு பதிவு செய்ய அச்சப்படுகிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்தின் படி அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.