ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகரின் பிரதான சாலையில் பள்ளம் ஒரு மாதமாக மூடப்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலையின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இருந்து ஓம் சக்தி நகர் வரை செல்லும் சாலையின் ஓரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் மற்றும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியதை சீரமைப்பதற்காக நகராட்சி சார்பில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால் பணி முழுமை அடையாததால் ஒரு மாதமாக பள்ளம் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, பள்ளத்தில் தேங்கி குளம் போல் கிடப்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு நிலவி வருகிறது.
கழிவுநீர் மற்றும் பள்ளத்தால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் இப்பகுதியில் 3 பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.
இதுபோன்று குடிநீர் என நினைத்து கழிவுநீர் பகுதிக்கு செல்லும் கால்நடைகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதத்தை முழுமையாக சீரமைத்து பள்ளத்தை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.