*விபத்துக்கு முன் அகற்ற வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புலவர் நத்தம் கிராம ஊராட்சி கீழ்பாதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை அருகே அம்மாபேட்டை ஒன்றியத்திற்க்கு உட்பட்ட புலவர் நத்தம் கிராம ஊராட்சி கீழ்பாதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து பக்கவாட்டு சுவரில் ஓட்டை விழுந்துள்ளது. இதிலிருந்து நாள் முழுவதும் தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீரும் முழுமையாக கிடைக்கவில்லை. அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீராமைத்து தர கோரி பல முறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தும் இது நாள் வரை சரி செய்திட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொட்டியில் ஓட்டை விழுந்து தண்ணீர் வீணாகி வருவதால் யாருக்கும் பயனின்றி உள்ளது. எனவே குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து யாரும் விபத்தில் சிக்கிக் கொள்ளும் முன் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.