நல்லம்பாக்கம் சாலையில் டாரஸ் லாரிகளின் அதிக சுமையால் புதிய தார்சாலை கடும் சேதம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் செல்லும் சுமார் 14 கிமீ தூரத்துக்கு புதிதாக தார்சாலை போடப்பட்டுள்ளது. இதில் 750 மீட்டர் நீளம் கொண்ட காட்டூர் முதல் அருங்கால் வரை மற்றும் 2 கிமீ நீளம் கொண்ட நல்லம்பாக்கம் முதல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் நல்லம்பாக்கம் கூட் ரோடு வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சாலை வனத்துறையின் முட்டுக்கட்டையால், ஏற்கனவே கடந்த 23 ஆண்டுகளாக புதிய தார் சாலை போடப்படவில்லை. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, கடந்த மாதம் ரூ.5 கோடி மதிப்பில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டன.
எனினும், இங்குள்ள ஏராளமான தனியார் கிரஷர்களில் இருந்து அதிகளவு பாரங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகளால் புதிதாக போடப்பட்ட தார்சாலை பலத்த சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறி, தூசி பறக்கும் மண் சாலையாக மாறிவிட்டது. ஏற்கனவே, ஊரப்பாக்கத்தில் இருந்து நல்லம்பாக்கம் கூட் ரோடு வரை செல்லும் 14 கிமீ சாலையில் 18 டன்னுக்கு மேல் கனிமங்களை ஏற்றி செல்லக்கூடாது. அதற்குமேல் ஏற்றி சென்றால் சாலை சேதமாகும் என்பதால், இச்சாலையில் அதிக பாரம் ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று நெடுஞ்சாலை துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அவை காணாமல் போய், 90 டன்னுக்கு மேல் அதிக பாரங்களை ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் சென்று வருகின்றன. இதனால் அச்சாலையில் பல்வேறு சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், அவ்வழியே சென்று வரும் மாணவர்கள், வயதானவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட அனைவரும் மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு, பல்வேறு நோய்தொற்றுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.