பெங்களூர்: கர்நாடக மாநிலம், பெங்களூரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கார்கே, ‘‘மதத்தின் பெயராலும், சமூகத்தை அழிக்கும் ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை அவமதிப்பதற்கு முயன்ற நபர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பின் வழக்கறிஞர்கள், அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்றவர்களிடம் இருந்து பெரிய அளவில் எந்த கருத்துக்களும் வரவில்லை என்பதை நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அளவிலான கண்டனத்தை பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் வால்மீகி சமூகத்தை சேர்ந்த ஒருவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை இது காட்டுகின்றது. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதாரண நபராக இருந்தாலும் சரி அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி இந்த அரசின் கீழ் அவர்களுக்கு மரியாதை இல்லை. தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் ஒருவர் மீது காலணியை வீசி அவமதிக்க முயன்றால் ஒரு சாதாரண மனிதர் அல்லது அதிகாரி அல்லது எழுத்தரின் நிலை என்னவாகும். அமைதியாக இருப்பதற்கு பதிலாக நாம் போராட வேண்டும்” என்றார்.