Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்தர்களின் நீண்ட கால கனவு; கன்னியாகுமரி - திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கப்படுமா?.. மதுரை திருவண்ணாமலை வழியாக செல்ல கோரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு பயணிக்கிறார்கள். தற்போது திருப்பதி செல்ல சென்னை மற்றும் விழுப்புரம் தவிர தமிழ்நாட்டின் வேறு எந்த நகரத்தில் இருந்தும் தினசரி தனி ரயில் சேவை இல்லை. ஒரு சில நெடுந்தூர ரயில்கள், கேரளாவிற்கு செல்லும் வழியில் சேலம் மற்றும் கோவை வழியாக இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டிலிருந்து திருப்பதிக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்தும் அதிகம் பேர் பயணிக்கிறார்கள்.

எனவே பக்தர்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ராமேஸ்வரம் - திருப்பதி மற்றும் மன்னார்குடி - திருப்பதி ஆகிய இரு ரயில்கள் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை தினசரி ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரயில்வே துறை இதனை கவனத்தில் கொள்ள வில்லை. கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கன்னியாகுமரி - விழுப்புரம் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணி முடிவடைந்துள்ளது. இதனால் தண்டவாள டிராபிக் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. நாகர்கோவிலில் புதிய பிட்லைன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ரயில் பராமரிப்பு பிரச்சினைகளும் இருக்காது. இதுவே கன்னியாகுமரி-திருப்பதி தினசரி ரயில் இயக்குவதற்கு உகந்த நேரமாகும். எனவே கன்னியாகுமரியில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் 9 நாள் பிரமமோற்சவ விழா, இந்த ஆண்டு வரும் 24 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. அக்டோபர் 1-ம் தேதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா, இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, அக்டோபர் 2-ம் தேதி காலை 6 முதல் 9 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (தீர்த்தவாரி) நடைபெறும்.

அதைத் தொடர்ந்து, இரவு 8.30 முதல் 10 மணி வரை கொடியிறக்க விழாவுடன் பிரம்மோற்சவம் நிறைவடையும். இந்த 9 நாள் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியிலிருந்து மதுரை, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு தினசரி சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும். இந்த ரயிலின் வருவாயைப் பொறுத்து, இதனை நிரந்தர தினசரி ரயிலாக அறிவித்து இயக்கலாம் என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ஓடியது

2000-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருத்தணி வழியாக திருப்பதிக்கு வாரத்தில் இரு நாட்கள் ரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது. இந்த ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. பின்னர், இது திருப்பதி-மும்பை ரயிலுடன் இணைக்கப்பட்டு, நாகர்கோவில் - திருப்பதி மற்றும் திருப்பதி - மும்பை என இரு ரயில்களாக இயக்கப்பட்டது. அதன் பிறகு, இரு ரயில்களும் இணைக்கப்பட்டு நாகர்கோவில் - மும்பை என்ற ஒற்றை ரயிலாக மாற்றப்பட்டது. ஆனால், 2013-ம் ஆண்டு முதல், இந்த ரயில் திருப்பதிக்கு செல்லாமல் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுகிறது. இதனால், இந்த ரயிலின் அறிமுக நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.