தினமும் 2 கோடிக்கும் மேலாக ஜரூராக விற்பனையாகும் நிலையில் தென்மாவட்டங்களில் வாரம் இருமுறை முட்டை விலை நிர்ணயம்
*சங்கரன்கோவிலில் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை
சங்கரன்கோவில் : தென்மாவட்டத்தில் தினமும் 2 கோடிக்கும் மேலாக முட்டை விற்பனையாகி வரும் சூழலில் வாரம் இருமுறை முட்டை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சங்கரன்கோவிலில் வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில் தென்மாவட்ட வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் வாரம் இருமுறை முட்டை மார்க்கெட் நடைமுறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முட்டை வியாபாரி சங்க நிர்வாகிகள் சுப்பையா, சண்முகவேல், முத்துக்குமார், பரந்தாமன், ராமர், எகியா, கண்ணன், ரபீக், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பிறகு தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘தென் மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 2 கோடிக்கும் மேலாக முட்டைகள் விற்பனையாகிறது.
வாரம் இருமுறை முட்டை மார்க்கெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நாமக்கல்லில் இருந்து மொத்த முட்டை வியாபாரிகள் நேரடியாக தென் மாவட்டங்களில் முட்டைகளை விற்பனை செய்கின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு தலையிட்டு எங்களுடைய பிரச்சனையை தீர்த்துக் கொடுக்க வேண்டும்’ என்றனர்.