Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிலிண்டர் விலை குறைவு.. டீ விலை அதிகரிப்பு.. செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வந்த 5 முக்கிய மாற்றங்கள்

சென்னை : சென்னையில் டீ, காபி, பால் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை மாற்றம், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, எஸ்பிஐ கார்டு விதி மாற்றம், தபால் துறை சேவை மாற்றம் ஆகியவை செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, சமயபுரம் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. குறைந்தபட்சமாக 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 395 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாரி, பேருந்துகளுக்கு ஒரு முறை பயணத்திற்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 10 ரூபாய் உயர்ந்து 370 ரூபாயாக வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்கக்கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு, தனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கான விதிகளில் 2025 செப்டம்பர் 1 முதல் மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட சில கார்டுகளுக்கான பரிசுப் புள்ளிகள் (Reward Points) திட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் படி, அந்த கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் கேமிங் மற்றும் அரசு இணையதள பரிவர்த்தனைகளில் செலவழிப்பதற்காக இனி பரிசுப் புள்ளிகளை பெற முடியாது.

தபால் துறை 2025 செப்டம்பர் 1 முதல் உள்நாட்டு பதிவுத்தபாலை (Registered Post) ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளது. எனவே, செப்டம்பர் 1 முதல் இந்திய அஞ்சல் மூலம் நாட்டுக்குள் நீங்கள் அனுப்பும் எந்த பதிவுத்தபாலும் ஸ்பீட் போஸ்ட் மூலமே அனுப்பப்படும்.

சென்னையில் டீக்கடைகளில், டீ, காபி, பால் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு தேநீர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், காபி விலை 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கப் டீ, 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், பால் 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.