Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திராவில் காக்கிநாடா அருகே மோன்தா புயல் கரை கடந்தது: மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறை காற்று; 12 கடலோர மாவட்டங்களில் கனமழை; வீடுகள் இடிந்தது: மின்கம்பங்கள் சாய்ந்தது; 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியது

திருமலை: ஆந்திராவில் காக்கிநாடா அருகே மோன்தா புயல் நேற்று இரவு கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 110 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசியது. 12 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வீடுகள் இடிந்தன. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மாநிலத்தில் 43 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நீரில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவான மோன்தா புயல்,நேற்று காலை மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வந்தது.

இந்த புயல் சின்னம் காரணமாக ஆந்திராவில் நெல்லூர் முதல் ஒடிசா எல்லையில் உள்ள சீக்காகுளம் வரை 12 கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்தது. கடற்பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டது. குறிப்பாக காக்கிநாடா, மச்சிலிபட்டினம், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட ஏனாம் ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. பல இடத்தில் மண்சரிவும், மின் கம்பங்கள், மரங்கள், சரிந்து விழுந்தது. புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட காக்கிநாடா பகுதியில் நேற்று காலை முதலே புயலின் தாக்கம் அதிகரித்திருந்தது.

குறிப்பாக உப்பாடா கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தது. கடற்கரையொட்டிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் கடற்கரையோர பகுதிகளில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. கடல் கொந்தளிப்பால் கரையோரத்தில் உள்ள கற்கள் சாலைகளில் வந்து விழுந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கடற்கரையோர மக்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புயல் எதிரொலி காரணமாக காகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், அனகாப்பள்ளி, நெல்லூர், கோணசீமா மற்றும் காக்கிநாடா மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை பெய்துள்ளது. அதேபோல் புயல் மழை காரணமாக ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்கள் இடையே இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோன்தா புயல் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாணுடன் அமராவதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

அப்போது தொடர் மழையால் ஓடைகள் திடீரென நிரம்பி வழியும் பகுதிகளில் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிக்கவும், புயல்களால் ஏற்பட்ட சேதங்களின் பாதிப்புகளை மதிப்பிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். காக்கிநாடா, மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் மற்றும் பிற பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் மழை மற்றும் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதாக முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காக்கிநாடாவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கூடுதல் மீட்புக் குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் துணைப் பேரிடர் மீட்புப் படை குழுக்களை அனுப்ப முதல்வர் உத்தரவிட்டார்.

மேலும் மழையின் தாக்கத்தால் 43 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே காக்கிநாடா அருகே மோன்தா பயுல் சின்னம் கரையை கடக்க துவங்கியது. அப்போது, மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.கனமழையும் கொட்டி தீர்த்தது. நள்ளிரவுக்குள் புயல் சின்னம் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடந்த போது ஏற்பட்ட சேதம் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

* 116 ரயில்கள் ரத்து

மோன்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதித்துள்ளது. குறிப்பாக 116 ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 ரயில்கள் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முழு பணமும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* 1.92 கோடி மக்களுக்கு செல்போனில் தகவல்

நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 24 மணி நேரத்தில் விசாகப்பட்டினம், கோனசீமா, காகுளம், அனகப்பள்ளி, மேற்கு கோதாவரி, நெல்லூர் மற்றும் பிற பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. மோன்தா புயலின் தாக்கத்தால் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1.92 கோடி மக்களின் செல்போன்களுக்கு கனமழை எச்சரிக்கை தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* போக்குவரத்து நிறுத்தம் வாகன ஓட்டிகளுக்கு உணவு

ஆந்திராவில் புயல் பாதித்த பகுதிகளில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யவும், இதன் காரணமாக நிறுத்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போலீசார் மற்றும் அதிகாரிகள் விடிய விடிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

* 81 வயர்லெஸ் கோபுரங்கள் அமைப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 2,703 ஜெனரேட்டர்களும், அத்தியாவசியப் பொருட்களும் செயலகம் வாரியாக தயார் செய்யப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக காவல் துறை 81 கோபுரங்களுடன் வயர்லெஸ் அமைப்பை அமைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.