Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிட்வா புயல் கனமழையை எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உதவ திமுகவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: டிட்வா புயல் எதிர்கொள்ள அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதோடு மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் திமுகவும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என திமுக உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை செயலாளர்களை தயார் நிலையில் இருக்கும்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும். மழைக்காலத்தில் திமுகவினர், பொதுமக்கள் - தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றி கிடைக்கின்றனவா என்பதை கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளை செய்து தரவும், ஆங்காங்கே நடைபெறும் மீட்பு பணிகளிலும் உதவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மழைக்காலத்தை எதிர்கொள்ளவும் - பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையிலும் திமுக களத்தில் முழுமூச்சுடன் துணையாக நிற்க வேண்டும் என திமுக உடன்பிறப்புகளையும், நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.