டிட்வா' புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்க, 8 கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து அமைச்சர் துரைமுருகன் உத்தரவு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்க, 8 கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24ம் தேதி தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு விவரங்கள் மற்றும் தற்போது நீர் நிலைகளில் உள்ள நீர் இருப்பு விவரங்கள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று நீர்வளத்துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் திருச்சி மண்டலப் பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், டிட்வா புயல் நிமித்தமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களான செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருமழையினை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுவரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு நீர்வளத்துறையின் 8 கண்காணிப்புப் பொறியாளர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும், காவிரி கடைமடை பாசனப்பகுதிகளான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் JCB / Poclaim இயந்திரங்களைப் பயன்படுத்தி வடிகால் ஆறுகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றிடவும், இயந்திரங்களை பயன்படுத்த முடியாத பகுதிகளில் வேலையாட்களை பயன்படுத்தி ஆகாயத்தாமரைகளை அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட கண்காணிப்புப் பொறியாளர்கள் 27.11.2025 முதல் 02.12.2025 வரை தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்றுவரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை கள ஆய்வு செய்து அரசு செயலாளர் அவர்களுக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் அறிக்கையாக சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.

