கொழும்பு: இலங்கையில் கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் கோர தாண்டவமாடிய டிட்வா புயலுக்கு 638 பேர் பலியாகி விட்டனர். 190க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும், புயல், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. டிட்வா பேரிடர் காரணமாக இலங்கைக்கு சுமார் 700 கோடி வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்தியா மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில், டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கைக்கு ரூ.316 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநா ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிரான்ச் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஐநா மற்றும் பிற மனிதாபிமான உதவி செய்யும் நாடுகள் இணைந்து மனிதநேய முன்னுரிமைகள் உதவி திட்டத்தை இலங்கைக்கு வழங்க தொடங்கி உள்ளோம். இலங்கைக்கான ஐநாவின் மனிதநேய பாதுகாப்பு திட்டத்துக்கு நிதி உதவி திட்டத்தில் பங்களிக்குமாறு சர்வதேச சமூகங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஏற்கனவே ரூ.85 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. மேலும், ரூ.231 கோடி நிதி திரட்ட திட்டமிப்பட்டுள்ளது. இந்த நிதி அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும்” என்றார்.


