திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா-மசூலிப்பட்டினம் இடையே மோன்தா புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இதனால் கோணசீமா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. புயல், மழை காரணமாக மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று காலை மழையால் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சென்று வான்வழியாக சேதவிவரங்களை ஆய்வு செய்தார்.
கோணசீமா மாவட்டம் அல்லவரம் பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி சாலை வழியாக காரில் சென்று சேதவிவரங்களை பார்வையிட்டார். பின்னர், மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு 25 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பு மற்றும் ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினார். மோன்தா புயல் காரணமாக மாநிலத்தில் மொத்தம் 249 மண்டலங்கள், 1,434 கிராமங்கள் மற்றும் 48 நகராட்சிகளில் 18 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் சேதமாகியுள்ளது. 42 கால்நடைகள் இறந்துள்ளது.
சாலைகள், 14 பாலங்கள் மற்றும் மதகுகள் சேதமாகியுள்ளது. தற்போது வரை முதற்கட்ட ஆய்வில் ரூ.1,476.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முழு ஆய்வுக்கு பிறகே மொத்த இழப்பின் மதிப்பு தெரியவரும் என முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பயிர் சேதம் குறித்து கணக்கீடு செய்ய தனிகமிட்டி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் பேசி உரிய இழப்பீடு பெறப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
