Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கஜா புயலால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெறாதவர் மீண்டும் மனு கொடுத்தால் பரிசீலனை: தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56,942 குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 30,322 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து, கஜா புயலால் இடிந்த வீடுகள், பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை மரங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசு தான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அரசு நியாயமான இழப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.