ஒடிசாவை நெருங்கும் ‘மோந்தா’ புயல்; கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: மீட்புப் படைகள் முழுவீச்சில் தயார்
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோந்தா’ புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு அனைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கும் முழு அளவில் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் நாளை முதல் (அக். 27) முதல் 29ம் தேதி வரை ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒடிசா மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புப் படை, ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படை மற்றும் தீயணைப்புப் படை வீரர்களை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.
குறிப்பாக, ஒடிசாவின் கோராபுட், மல்கங்கிரி, கஞ்சம் உள்ளிட்ட 7 தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளுக்கும் தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒடிசா தீயணைப்புத் துறை அதிகாரி பிரபாத் குமார் கூறுகையில், ‘புயலின்போது மீட்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ளத் தேவையான விசைப் படகுகள், சக்திவாய்ந்த வெட்டும் கருவிகள், கையடக்க மின்விளக்குகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் முழு அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்றார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி, ‘நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், இன்று முதல் 29ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘மோந்தா’ புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டாலும், ஒடிசாவில் பரவலான மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
