மோன்தா புயல் கரையை கடந்த நிலையில் கொட்டும் கனமழை: ஸ்ரீசைலத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்
அமராவதி: மோன்தா புயல் கரையை கடந்த நிலையில், ஆந்திராவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மீனவர்களின் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆந்திராவில் மோன்தா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மசூலிப்பட்டினம், காக்கிநாடா இடையே உள்ள நர்சிப்பட்டினம் அருகே கரையை கடந்த நிலையில், தொடர்ந்து கோனசீமா, விசாகப்பட்டினம், விஜயவாடா முதல் சீக்காகுளம் வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீசைலம் அணைக்கு செல்லக்கூடிய பாதாளம் கங்கை என்று அழைக்கக்கூடிய பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்று கடைகள் சேதம் அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கிராமத்தில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில், இரவில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளும் சேர்ந்து காணப்பட்டது. இதைப்போன்று பல ஆந்திரா மாநிலத்தில் உள்ள பல கிராமங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டது.
2,000க்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்த நிலையில், அதன் புனரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காக்கிநாடா அருகே ரயில் பாதைகள் சேதம் அடைந்த நிலையில், அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடர் கனமழை மற்றும் சூறாவளி காரணமாக ஏற்கனவே தென்மேற்கு ரயில்வே 116 ரயில்கள் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
