Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒட்டு கேட்பு கருவி விவகாரம்: ராமதாஸ் வீட்டில் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை தொடங்கியது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் வீட்டில் ஒட்டுகேட்பு கருவி மீட்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் இன்று காலை நேரில் சென்று விசாரணையை தொடங்கினர். பாமகவில் தந்தை, மகனிடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கடந்த 9ம் தேதி மாலை 6.30 மணிக்கு வீட்டு ஹாலை சுத்தம் செய்தபோது ராமதாஸ் உட்காரும் இருக்கைக்கு அருகில் ஒட்டுகேட்பு கருவி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து தனியார் துப்பறியும் நிபுணர்கள் மூலம் இதனை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதிநவீன இந்த கருவி லண்டனிலிருந்து வந்தவை என்றும், சிம்கார்டு அங்கிருந்துதான் வந்தது என்று தெரியவந்தது. இதுகுறித்து ராமதாஸ் தரப்பில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தலைமையில் விழுப்புரம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

அப்போது சைபர் கிரைம் உயர் அதிகாரிகள் உத்தரவு பெற்று தனிக்குழு அமைத்து விசாரணையை தொடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதன்படி இன்று காலை விழுப்புரம் சைபர்கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ கொண்ட குழுவினர் அதிநவீன கருவிகளை கொண்டு சென்று தைலாபுரம் தோட்டத்தில் விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொறுத்தப்பட்ட சிசிடிவி கேமிராக்களில் கடந்த 2 மாதமாக பதிவான காட்சிகளையும் கொண்டு விசாரணையை தொடங்கினர். மேலும் வீட்டிற்கு சென்ற போலீசார் இந்த ஒட்டுகேட்பு கருவியின் தன்மை குறித்தும், வீட்டிலிருந்த பணியாளர்களிடமும் விசாரணையை தொடங்கினர். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாசிடம் இந்த ஒட்டுகேட்பு கருவி குறித்து எப்போது சந்தேகம் வந்தது? எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? தனியார் துப்பறியும் நிறுவனம் யார்? என்ற விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

தைலாபுரம் தோட்டத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு நடத்தி வருகிறார். இதில் பங்கேற்க 50க்கும் மேற்பட்ட ஊடகத்தினர் சென்று வருகின்றனர். இந்த ஒட்டுகேட்பு கருவி விவகாரத்தில் பாமகவினரிடையேயும், அடுத்தகட்டமாக செய்தியாளர்களிடமும் சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீடியா போர்வையில் யாரேனும் உள்ளே வந்தார்களா? அல்லது கருவியை வைக்க சொன்னார்களா? என்பது குறித்தும் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.