சென்னை: மாணவர்களுக்கு சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக உயர்கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய டிஜிட்டல் காலத்தில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக, சைபர் பாதுகாப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், பார்லிமென்ட் உள்துறை நிலைக்குழு, தனது 254ம் அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்பம் அல்லாத பாடத்திட்டங்களிலும் சைபர் பாதுகாப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த அடிப்படை அறிவு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை பின்பற்றி, மாணவர்களுக்கு சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement