சைபர் உதவி மையம்,இ-சலான் என்ற பெயரில் புதிய வகை மோசடிகள்: பொதுமக்கள் உஷாராக இருக்க மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை
சென்னை: சைபர் உதவி மையம் மற்றும் இ-சலான் என்ற பெயர்களில் மோசடிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநில சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இணைய வழி குற்றப்பிரிவு, சமீபத்தில் 2 வகையான தனித்துவமான இணைய மோசடிகள் வேகமாக அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது. இம்மோசடிகள் வஞ்சகத் தன்மையுடன் கூடிய புதிய முறைகளை கொண்டவை. புகார் அளிக்கப்படும் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விழிப்பும், முன்னெச்சரிக்கையும் முக்கியமாகும்.
* இ-சலான் மோசடி
போக்குவரத்து விதிமீறல் இ-சலான் மோசடி தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. மக்கள், போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் செலுத்த வேண்டும் எனற் செய்திகளை பெறுகிறார்கள். இந்த செய்திகள் ஒரு ஏபிகே கோப்பிற்கான லிங்க் கொடுக்கப்படுகிறது. ஆனால் இது போலியான ஒரு செயலியாகும். இதை நிறுவியவுடன் அந்த போலி ஆப் வங்கி தொடர்பான நுணுக்கமான ஓடிபி போன்ற தகவல்களை திருடி, மோசடி பரிவர்த்தனைகளை செய்யும். இதுமாதிரியான ‘ஏபிகே’ செயலிகளை நிறுவி பலர் ஏற்கனவே பெரும் பண இழப்புகளை சந்தித்துள்ளனர்.
* சைபர் உதவி மையம் மோசடி
மோசடியாளர்கள் புதிய வகை தந்திரத்தினை பயன்படுத்தி ஏற்கனவே ஏதோ ஒரு சைபர் மோசடியால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க உதவியை நாடும் போது, தங்களை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் அல்லது சட்ட வக்கீல்கள் என போலியாக நடித்து மற்றொரு குழு அணுகுகிறது. அவர்கள் புகார் அளிப்பதற்கோ, இழந்த பணத்தை மீட்பதற்கோ கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி பாதிக்கப்பட்டவரிடம் கூடுதல் பணம் வாங்குகிறார்கள். இதன் மூலம் மோசடிகள் ஏற்படுகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எப்போதும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் மட்டும் போக்குவரத்து அபராதங்களை சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ கூகுல் பிளே ஸ்டோர் லிங்க்:mParivahanAPP போக்குவரத்து துறை, அரசு ஒருபோதும் வாட்ஸ் அப்பில் அபராத தகவல் அனுப்பாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தெரியாத எண்ணிலிருந்து வரும் ‘ஏபிகே’ கோப்பு அல்லது மற்ற அப்ளிகேஷன்களை பதிவிறக்கம், கிளிக் செய்யாதீர்கள். ஓடிபி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். எப்போதும் உங்கள் மொபைல் செக்யூரிட்டி அப்டேட் செய்யப்படுகிறதா என உறுதி செய்யவும்.
சைபர் குற்ற புகார் அளிப்பது முற்றிலும் இலவசம். எப்போதும் அதிகாரப்பூர்வ எண்ணை(1930) அல்லது cybercrime.gov.in பயன்படுத்தவும். நேரடியாக உங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்பவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம். கூகுல் தேடல் முடிவுகளை மட்டுமே நம்பாதீர்கள், சில போலி தளங்களை யாரும் மேலே தோன்றச்செய்ய முடியும். தெரியாத எண்கள், வாட்ஸ் அப், மின்னஞ்சலில் வருபவர்களை ‘சட்ட ஆலோசகர் சைபர் அதிகாரி’ என நம்ப வேண்டாம். எப்போதும் அரசின் அதிகாரப்பூர்வ தளங்கள், அலைவரிசைகள் மூலம் அடையாளத்தை கண்டறியவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.