சென்னை: அதிமுக எம்பி சி.வி.சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் அபராத தொகையை கல்வராயன் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.7.2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களை சென்று சேரும் வகையில்‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தொடரப்பட்ட வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த அனுமதி அளித்தது. இந்த வழக்கை தொடுத்த சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
இந்த அபராத தொகையை தமிழ்நாடு அரசுக்கு செலுத்தவும், அந்த தொகையை தமிழ்நாடு அரசு சார்பில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கிணங்க சி.வி.சண்முகம் அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தை இன்று (நேற்று) தமிழ்நாடு அரசுக்கு செலுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்த தொகையை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலை வட்டாரத்தில் அதிகமாக வசிக்கும் மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார நலத்திட்டங்களுக்கும், அங்கு நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.