சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், அக்பர், பாபர், அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்துக் கூறி, நடப்பு “இந்துத்துவா” அரசியல் கருத்தியலுக்கு ஆதரவு திரட்டவும் பெரும்பான்மை மதவெறியூட்டும் வகையிலும் விவரிக்கப்பட்டுள்ளது.
இது, பள்ளி வயது குழந்தைகளின் மனதில் ஆரம்ப நிலையில் மதவெறி விஷ விதைகளை விதைக்கும் வன்மம் நிறைந்த செயலாகும். மதவெறி நஞ்சு விதைகளை பிஞ்சு மனங்களில் விதைத்து, சிறுபான்மையினருக்கு எதிராக பகையும், வெறுப்பும் வளர்க்கும் பாடத்திட்டங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதித்து இருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.