தற்போது 2 எம்எல்ஏக்கள் உள்ளனர் மற்ற 3 எம்எல்ஏக்களும் எங்களுடன் வருவார்கள்: பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி
ஓசூர்: தற்போது பாமக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ள நிலையில், மற்ற 3 எம்எல்ஏக்கள் விரைவில் எங்களுடன் வருவார்கள் என ராமதாஸ் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ராமதாஸ், அவரது மகள் காந்திமதி பரசுராமன், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, சேலம் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: ஓசூரை தலைமையிடமாக கொண்டு ஓசூர், தளி மற்றும் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தனி மாவட்டம் உருவாக்க வேண்டும். இதனை தேர்தலுக்கு முன்பு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனது மகள் காந்திமதி முதல் முதலாக இந்த பொதுக்குழுவில் பேசி உள்ளார். கன்னிப்பேச்சை கேட்டு மகிழ்ந்துள்ளீர்கள். அவர் நன்றாக அழகாக பேசினார். தற்போது, 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். விரைவில் மீதமுள்ள 3 பாமக எல்எல்ஏக்களும் எங்களுடன் வரும் சூழல் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.