ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி துவக்க வீரர்கள் சாகிப்ஸதா ஃபர்கான், ஃபகார் ஜமான் சிறப்பான துவக்கத்தை தந்தனர். 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை தாண்டி 150 ரன்கள் அடித்து வெற்றியை சாத்தியமாக்கியது. வெற்றி பெற்ற வீரர்களும், இந்திய அணிக் குழுவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற மறுத்துவிட்டனர்.
நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பாகிஸ்தான் அமைச்சராகவும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறும்போது, “ஒரு அணியாக நாங்கள் (மொஹ்சின் நக்வியிடமிருந்து) கோப்பையை பெற வேண்டாம் என்று முடிவு செய்தோம். எங்களை யாரும் அப்படிச் செய்யுமாறு சொல்லவில்லை. ஆனால், போட்டியை வெல்லும் அணி கோப்பைக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன், எங்களுடைய கோப்பை விரைவில் இந்தியா வந்தடையும்” என்று கூறினார். இவை தவிர பாகிஸ்தான் வீரர்கள் கையசைவில் குண்டு போடுவது போல் செய்த செய்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த அசைவுகளும், கோப்பையை வாங்க மறுத்த வீரர்களின் வீடியோக்களுமாக அனைத்து சேனல்கள், செய்திகள், சமூக வலைதளங்கள் என டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக கேப்டன் சூர்ய குமார் கோப்பையே இல்லாமல் ரோஹித் ஷர்மா நடந்து வந்தது போல் நடந்து சென்று கொண்டாடிய மொமெண்ட்கள் எங்கும் பகிரப்பட்டு சமூக வலைத்தளம் வாழ்த்துகளால் நிரம்பி வழிகின்றன.