Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ரயில்வே அதிகாரிகள் 11 பேரிடம் சிறப்பு குழுவினர் விசாரணை: திருச்சி கோட்ட அலுவலகத்தில் நடந்தது

திருச்சி: கடலூர் - ஆலம்பாக்கம், செம்மங்குப்பம் பகுதியில் கடந்த 8ம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த ரயில்வே கேட் பகுதியில் வேலையில் இருந்த மத்திய பிரேதச மாநிலத்தை சேர்ந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்து விசாரிக்க திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி மகேஷ்குமார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டது. இதையொட்டி கேட் கீப்பர், லோகோ பைலட், முதுநிலை உதவி லோகோ பைலட் , ஆலம்பாக்கம் ரயில் நிலையத்தின் 2 மேலாளர்கள், கடலூர் ரயில் நிலைய மேலாளர்கள், கடலூர் முதுநிலை பிரிவு பொறியாளர்கள் இரண்டு பேர், ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, விழுப்புரம் முதுநிலை லோகோ ஆய்வாளர்கள், பள்ளி வேன் டிரைவர் உட்பட 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜாராக நேற்று முன்தினம் சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள கேட் கீப்பர் மற்றும் வேன் டிரைவர் தவிர 11 ரயில்வே துறை அதிகாரிகள் நேற்று விசாரணைக்காக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக விபத்து குறித்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், யார் மீது தவறு உள்ளது என்பது குறித்தும் சிறப்பு விசாரணை குழுவினர் ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

* தூங்கிய 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

கடலூர் விபத்து எதிரொலியாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் தலைமையிலான குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்- காஞ்சிபுரம் ரயில் மார்க்கத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை ரயில்வே கேட் உள்ள பகுதிகளுக்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தக்கோலம் மற்றும் சேந்தமங்கலம் பகுதிகளில் உள்ள ரயில்வே கேட் கீப்பர்கள் பணியின்போது தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை சென்னைக்கு திரும்பி விசாரணை நடத்தினர். பின்னர், தக்கோலம் கேட் கீப்பர் கார்த்திகேயன், சேந்தமங்கலம் கேட் கீப்பர் ஆசீஸ்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.