சென்னை: ஜனவரி 9ம் தேதி கடலூரில் மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: 2005ம் ஆண்டு மதுரை மாநகரில் கேப்டனால் தொடங்கப்பட்ட தேமுதிக 20 ஆண்டுகள் முடிவடைந்து நேற்று 21ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், துரோகங்கள், எல்லாவற்றையும் கடந்து 21ம் ஆண்டில் வெற்றியோடு வைக்கிறோம். ஜாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம், ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சனாதானம், சமதர்மம், சமத்துவத்தை கடைபிடிக்கும் கட்சி தேமுதிக.
தலைவர் இல்லாமல் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய சவாலான தேர்தல். உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் மக்களைத் தேடி, மக்கள் தலைவர் கேப்டன் ரதயாத்திரை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும். ஜனவரி 9 கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு 2.0 மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு வெற்றி மாநாடாக நிரூபிக்க வேண்டியது கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறபட்டுள்ளது.