கடலூரில் சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்தவேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் சிப்காட்டை ஒட்டிய குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்காக அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல் நலனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் சரி செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமானவையாகும். சில நாட்களுக்கு முன் நொச்சிக்காடு பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் குழு சென்றதால் மக்களிடம் அச்சம் அதிகரித்திருக்கிறது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


