கடலூரில் மதுபோதையில் இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பு: கூகுள் மேப் உதவியுடன் சென்று கடலில் இறங்கிய கார்!
கடலூர்: கடலூரில் சொத்திக்குப்பம் அருகே கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணித்த இளைஞர்கள் திடீரென காரை கடலில் இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 பேர் கடல் வழியாக பயணத்தை மேற்கொண்டார்கள். இந்நிலையில், இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வரை கடற்கரை ஓரம் உள்ள சாலையை பயன்படுத்தி கூகுள் மேப் மூலமாக பயணம் செய்தனர்.
காரில் பயணித்த இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததால் கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு வந்த அவர்கள் காரை கடலில் ஒட்ட முற்பட்டு காரை கடலில் இறக்கினர். கடலுக்குள் சென்ற கார் பாதியிலே நின்றது. இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக இறங்கி 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் காவல்துறை உதவியுடன் காரை டிராக்டர் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்று கடற்கரை ஓரம் யாரும் பயணிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கடற்கரை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.