கோவை: கோவையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஹேமந்த் பாஸ்கர் உள்ளிட்டோர் GROKR என்ற பெயரில் செயலி உருவாக்கி உள்ளனர். வாட்ஸ் ஆப் மூலம் பரவிய தகவலை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து பலர் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்க நிறுவனம் என்பதால் டாலரில் முதலீடு செய்ய வேண்டும் என மோசடி கும்பல் கூறியுள்ளது.
1000 டாலர் முதல் 3,000 டாலர் வரை முதலீடு செய்ய வேண்டும் என மோசடி கும்பல் கூறியதை நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர். செயலியில் லாபம் ஈட்டியதாக காட்டப்பட்டாலும் அதை எடுக்க விடாமல் மீண்டும் முதலீடு செய்ய கூறியுள்ளனர். அதிக லாபம் கிடைக்கிறது என நம்பி நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு பணம் வாங்கியும் பலர் முதலீடு செய்தனர். புதிதாக இணைய விரும்புவோரை உணவகங்களுக்கு அழைத்துச் சென்று மோசடி கும்பல் விருந்து வைத்துள்ளது. புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறி வாட்ஸ் ஆப் குழு அட்மின்களுக்கு நகைகளை தந்துள்ளனர். நகைகளை மோசடி கும்பல் வழங்கியதும் அதை நம்பி மேலும் பலர் முதலீடு செய்து வந்துள்ளனர்.
ஏராளமான பெண்கள் முதலீடு செய்த நிலையில் திடீரென செயலியின் செயல்பாட்டை மோசடி கும்பல் நிறுத்தியுள்ளது. செயலியை லாக்-இன் செய்ய முடியாமல் ஹேமந்த் பாஸ்கரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஹேமந்த் பாஸ்கரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். தங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.