பியாங்யாங்: சமீப காலமாக உலகம் முழுதும் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாடு அதிகரித்துள்ளது. இதில், தற்போது பல மோசடிகளும் நடக்கின்றன. அதாவது, வட கொரியா, இந்த கிரிப்டோ திருட்டில் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. ‘லாசரஸ் குரூப்’ என்ற பெயரில் அறியப்படும் இந்த ஹேக்கர்கள், கிரிப்டோ நிறுவனங்களின் வலைதளங்களை ஹேக் செய்து, கரன்சியை திருடி வட கொரியாவின் ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி அளிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த பிப்ரவரியில், துபாயை தளமாக கொண்ட ‘பைபிட்’ என்ற கிரிப்டோ வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து ரூ.13 ஆயிரம் கோடியை இந்த லாசர் குழு கொள்ளையடித்துள்ளது. இந்தாண்டில் இதுவரை, 30க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அவர்கள் திருடிய கிரிப்டோகரன்சியின் மதிப்பு ரூ.16 ஆயிரத்து 800 கோடியாகும். இது கடந்தாண்டை விட 3 மடங்கு அதிகமாகும். திருடப்பட்ட கிரிப்டோகரன்சி, வடகொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் வரை பங்களிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2017 முதல் இந்த லாசரஸ் குழு, ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கிரிப்டோ கரன்சி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.