உயிரிழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்: லதா ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சியினர், திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் காணொலி ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: கரூரில் நடந்த விபத்தை நினைத்து இதுவரை எனக்கு மனம் பதறிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் அன்றாடம் நாம் சந்தித்து மகிழும் தெய்வங்கள்.
இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எப்படி கூட்டம் இருக்கும், எந்த பகுதியில் நகர்வார்கள், என்ன பாதுகாப்பு முறைகள் இருக்கிறது என்று தெரியாமல் செல்லக் கூடாது. அந்தக் குழந்தைகள் நாம் அழைத்துச் செல்லும் இடத்துக்கு வந்து விடுவார்கள். ஆனால் அங்கே சென்ற பிறகு அந்த நெரிசலில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அந்த நிமிடம் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. கூட்ட நெரிசல் என்பதே அனைவரையும் மீறி நடக்கக் கூடிய ஒன்று. இந்த விபத்து ஏன் நடந்தது, எப்படி தவிர்த்திருக்கலாம், எப்படி பாதுகாப்பு செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவர் மனதிலும் இப்போது கேள்விகள் எழுந்து கொண்டிருநக்கின்றன.
இந்த நெரிசலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அந்த குடும்பங்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. பதில் சொல்லவும் முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் இறந்தவர்களின் தந்தை, அண்ணன், தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை நாம் தேற்றுவது கடினம். இப்படிப்பட்ட விபத்துகளின் போது பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். நாங்கள் பாரத சேவா என்ற ஸ்தாபனத்தை இதற்காகத்தான் உருவாக்கி இருக்கிறோம். நேற்று எங்கள் ஸ்தாபனத்தில் இருந்து தன்னார்வலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் ஒன்றாக இணைந்து, கட்டுப்பாட்டுடன் எப்படி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், எதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை யோசிக்க வேண்டிய நேரம் இது. எங்கு சென்றாலும் பாதுகாப்பை மட்டும் விட்டுவிடாதீர்கள்.
அந்த நெரிசலின் போது எந்த முயற்சி செய்தாலும் அது நடக்காத காரியம். அன்பான தமிழ் மக்களே எங்கு கூட்டம் இருந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டு விடக் கூடாது. குழந்தைகள், பெண்களால் அங்கிருந்து கடைசி நிமிடத்தில் ஓட முடியாது. நெரிசல் அதிகரிக்கும்போது அப்பகுதியில் இருந்து நகர்வது கடினமான விஷயம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம், பொதுமக்கள், காவல் துறை, இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒற்றுமையாக இருந்து இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இறந்த குழந்தைகளுக்கு இந்த நிகழ்ச்சியை பற்றி என்ன தெரியும். இன்று அவர்கள் இல்லை எனும் போது நம் மனது எப்படி பதறுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.