கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு கீழே விழுந்து உயிருக்கு போராடியவரை கண்டுக்காமல் விஜய் பேசியதால் செருப்பு, பாட்டில் வீசிய வாலிபர்: சிபிஆர் உதவி செய்து ஆம்புலன்ஸ் கேட்டு கதறும் புது வீடியோ வெளியாகி பரபரப்பு
கரூர்: தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி பிரசாரத்தின்போது, எம்எல்ஏ செந்தில் பாலாஜியை பற்றி பேசும்போதுதான், கூட்டத்தில் இருந்து விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அதன்பின்னர் தான் சலசலப்பு ஏற்பட்டு கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததாகவும் தவெகவினர் தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கும் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 27ம்தேதி மதியம் 12 மணிக்கு விஜய் வேலுச்சாமிபுரத்தில் பேசுவதாக இருந்தது.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இரவு 7 மணிக்கு தான் வந்தார். அன்றைய தினம் மாலை 5 மணி நிலவரப்படி வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் கூடியிருந்தது 5,000 பேர் தான். நேரம் ஆக ஆகத்தான் கூட்டம் அதிகமாக கூடியிருக்கிறது. அதோடு விஜய் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வந்த போது, பிரசார வாகனத்தின் கதவுகளை மூடிக்கொண்டு வந்தார். அதனால் வழிநெடுகிலும் அவரை பார்ப்பதற்காக காத்திருந்த தொண்டர்கள் அவருடை வாகனத்தின் பின்னாலேயே வரத் தொடங்கினர். இதனால் வேலுச்சாமிபுரத்தில் ஏற்கனவே கூடியிருந்த கூட்டத்தோடு, விஜய்யின் பிரசார வாகனத்தோடு வந்த கூட்டமும் சேர்ந்ததால் அதிகப்படியான நெரிசல் ஏற்பட்டது. விஜய் 7.13 மணிக்கு பேசத்தொடங்கினார்.
அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு அவர் கண் முன்னே பலர் மயக்கமடைந்து கீழே சாய்ந்து விழுந்தனர். விஜய்யின் பிரசார வாகனத்திற்கு மிக மிக அருகிலேயே மயக்கமடைந்து விழுந்தனர். இது விஜய்க்கும் தெரியும். மயங்கம் அடைந்து கீழே விழுந்த ஒருவருக்கு அருகில் இருப்பவர்கள் சிபிஆர் சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தனர். மேலும் மயக்கமடைந்த பலரை தோள்களில் தூக்கிக்கொண்டு இளைஞர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். ஒருவர் ஆம்புலன்ஸ் கொண்டு வாங்க என்று கத்துகிறார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விஜய் பேசிக்கொண்டிருந்தார்.
விஜய் பேச்சை நிறுத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரவும், கூட்டத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில், விஜய்க்கு தெரியப்படுத்தும் நோக்கில் அங்கிருந்த ஒருவர் கையில் கிடைத்த செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டிலை விஜய்யை நோக்கி வீசுகிறார். இது தற்போது வௌியாகியுள்ள வீடியோவில் தௌிவாக பதிவாகியுள்ளது. ஆனால் விஜய் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார். இதைவிட இன்னொரு பதைபதைக்கும் காட்சியும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அங்கு நிற்கும் தொண்டரோ, ரசிகரோ யாரோ ஒரு இளைஞர் விஜய்யை நோக்கி கைகளை ஆட்டி, கழுத்தை நெரிப்பது போல் சைகை காட்டி பத்து விரல்களை காட்டி கீழே காண்பிக்கிறார்.
அதாவது தனது சைகை மூலம் பத்து பேர் கழுத்து நெரிபட்டு கீழே விழுந்து கிடக்கிறார்கள் என்பதை அவர் பதைபதைப்போடு தெரியப்படுத்துகிறார் என்பதை அந்த வீடியோவை பார்க்கும் யாராலும் தௌிவாக உணர முடியும். தலையில் அடித்துக்கொண்டு பதைபதைப்போடு அந்த இளைஞர் பதறி அழும் காட்சி இப்போது வௌியாகியுள்ளது. இதை, பிரசார வாகனத்தின் மேல் நின்றிருக்கும் விஜய்யால் தெளிவாக பார்த்து, புரிந்து கொள்ள முடியும். உடனடியாக தனது பேச்சை நிறுத்தி, கூட்டத்தை கட்டுப்படுத்த விஜய் முயற்சி எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதத்தை ஒருவேளை தவிர்த்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு இந்த கோர சம்பவத்திற்கு தான் காரணமில்லை என்றும், வேறு யாரோதான் காரணம் என்பதை போல் விஜய் குற்றம் சாட்டி தப்பிக்க முயல்கிறார் என்பதை இந்த வீடியோ வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது என பொதுமக்களுக்கே புரியத்தொடங்கியுள்ளது. அதனால் இப்போது வௌியாகியிருக்கும் இந்த வீடியோ பரபரப்பாக வைரலாகி வருகிறது.