விமான நிலையம் போவதற்காக மெட்ரோவில் ஏறியிருந்தனர் பீட்டர் மாமாவும் விக்கியானந்தாவும். வேடிக்கை கூட பார்க்காமல் கேள்வி கேட்பதில் ஆர்வமாய் இருந்தார் மாமா. ‘‘பக்கத்து யூனியனில் சேலத்துக்கனி நிர்வாகிகள் தந்தை பக்கம் சாய்ந்திருப்பது மகன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காமே.. என்று கேட்டார். ‘‘சேலத்துக்கனி கட்சியில் தந்தையும், மகனும் போட்டி பொதுக்குழுவை நடத்தினாங்க.. இதனால் உண்மையான அடிமட்ட விசுவாசிகள் மிகுந்த சோகத்தில் இருக்கிறாங்களாம்..
இப்போது முட்டிக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் காலத்தில் சேர்ந்தாலும் ஓட்டு வங்கி கணிசமாக பாதிக்குமே என்ற கவலைதான் இதற்கு முக்கிய காரணமாம்.. தொண்டர்கள் எண்ணம் இப்படியிருக்க தந்தையோ, மகனுக்கு போட்டியாக மகளை முன்னிலைப்படுத்தி தேர்தலிலும் களமிறக்க தயாராகி விட்டாராம்.. இதற்காக கட்சி நிர்வாகிகளையும் அவர் தயார்படுத்தி வருகிறாராம்.. இதன் எதிரொலிதான் சிறப்பு பொதுக்குழுவில் உணர்ச்சிமிக்க பேனர் வாசகங்களாம்..
தமிழகத்தை ஒட்டிய யூனியன் பகுதி நிர்வாகிகளோ ஒருபடி மேலேபோய் ‘‘அய்யா ஆணையிட்டால் மனித வெடிகுண்டாய் மாறுவோம்” என்ற வாசகத்துடன் டி-சர்ட் அணிந்தார்களாம்.. இதுதான் அன்பு மணியானவர் வட்டாரத்தில் தற்போது சலசலப்பு ஏற்படுத்தியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரட்டையர்களாக வலம் வந்து கட்சி பொறுப்பு வாங்கி தருவதாக வசூலில் இறங்கியவர்கள் திடீரென தனித்தனியாக பிரிந்து கிடக்கிறாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டு மாவட்ட மலராத கட்சியின் புதிய மாவட்ட தலைவராக கடவுளின் பெயரை நடுவில் கொண்டவர் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவர், தனக்கு துணையாக தமிழ் பெயரைக் கொண்ட மாவட்ட பொறுப்பில் உள்ள ஒருவருடன் சேர்ந்து கட்சிப்பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். இரட்டையர்கள் என கூறுமளவுக்கு இருவரும் ஒன்றாகவே பயணித்து வந்தாங்க.. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தனக்கு இளைஞரணியில் முக்கிய பொறுப்பு தர வேண்டுமென தமிழ் பெயர்க்காரர் கூறினாராம்.. புதிய தலைவரும் ஓகே சொல்லிட்டாராம்..
இருவரும் சேர்ந்து மாவட்டத்தில் பலருக்கு கட்சி பொறுப்புகள் வாங்கித் தருவதாக கூறி கணக்கில்லாமல் வசூலித்ததாக புகார் எழுந்தது. ஆனால், யாருக்கும் எந்த பதவியும் வாங்கித் தரவில்லையாம்.. மேலும், வசூலித்த பணத்தில் புதிய தலைவர் பெரும் பங்கை தன் சைடு ஒதுங்கிக் கொண்டாராம்... வசூலிப்பில் முக்கிய பங்கு வகித்த தமிழ் பெயர்க்காரர், இதனால் ஏமாற்றமடைந்த விரக்தியில் இருக்க, பதவிக்காக பணம் கொடுத்தவர்கள் இவரை தினந்தோறும் நச்சரிக்கத் தொடங்கி விட்டனராம்.. புதிய தலைவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் கையை விரித்து விட்டாராம்..
வசூல் பங்குதொகை தொடர்பாகவும் மூச்சு விடவில்லையாம்.. இதனால் இரட்டையர்கள் போல வலம் வந்த இருவரும் தனித்தனியாய் பிரிந்து கிடக்கின்றனராம்.. மேலும், புதிய தலைவரை கட்டம் கட்டுவதற்காக, தமிழ் பெயரைக் கொண்டவர், தனது ஆதரவாளர்களை அழைத்து ரகசிய கூட்டம் போட்டுள்ளாராம்.. பூட்டு மாவட்டத்தில் இதுதான் தற்போது பரபரப்பா போய்க்கிட்டிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாநகர ஒரே ஒரு இலைக்கட்சி எம்எல்ஏவும் தன்னை நிர்வாகிகள் அவமானப்படுத்தி விட்டதாக குமுறுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் வேட்பாளர் தேர்வும், தேர்தல் வேலையும் ரொம்பவே சூடுபிடிக்க தொடங்கியிருக்காம்.. தெற்கு தொகுதியில் யாரை நிறுத்தினாலும் இலையே ஜெயிக்கும் என கூறிக் கொண்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட உள்ளுர் கட்சிக்காரர்கள், நான் தான் அடுத்த வேட்பாளர் என நெஞ்சை நிமித்திக்கிட்டிருந்தாங்களாம்.. ஆனால் தற்போது புதியதாக புறநகர் மாவட்டத்தில் இருந்து மாநகருக்கு குடிவந்திருக்காராம் தறித்தொழிலில் சம்பாதித்த பணத்துடன் ஒருவர்.
யாராவது உனக்கு வேம்படிதாளம் தானே என கேட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒன்றரை கோடியில் வீடு ஒன்றை வாங்கி உள்ளே வந்திருக்காராம்.. அவரை அறிமுகப்படுத்தும் கூட்டமும் கட்சி ஆபீசில் நடந்ததாக தொண்டர்கள் சொல்றாங்க.. இதற்கிடையில் தேர்தல் வேலையும் தொடங்கிட்டாங்களாம்.. இது தொடர்பாக வட்டச்செயலாளர் கூட்டத்தை மா.செ. கூட்டினாராம்.. ஐந்து நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை கையில் வச்சிக்கிட்டு, யாரெல்லாம் இருக்காங்க..
எத்தனை பேர் இறந்துபோயிருக்காங்க என்ற விவரத்தை தெரிவிச்சே ஆகணுமுன்னு பொறுப்பாளர் உத்தரவை போட்டாராம்.. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பாசமழை பொழிவதுடன் அவர்களுக்கு சரியான நேரத்தில் எல்லாம் கிடைக்குமுன்னும் சொல்லி குஷி படுத்தியதோடு முடியாது என்பவர்களுக்கு இருக்கும் பதவியும் பறிக்கப்படும் எனவும் சொன்னாராம்.. தினமும் பத்துமணி நேரம் நிர்வாகிகளை வரவழைச்சி செயலாளரும், பொறுப்பாளரும் கெத்துக் காட்டுவதாக கட்சிக்காரங்க புலம்பல் பெருசா இருக்குதாம்..
அதே நேரத்தில் மாநகரத்தில் இருக்கும் ஒரே எம்எல்ஏவுக்கு கூட மேடையில் இருக்கை வழங்காம, கீழே அமரவச்சி அவமானப்படுத்திட்டாங்களாம்.. இதனால மனசொடிஞ்சி போன அந்த எம்எல்ஏ இலைக்கட்சி தலைவரை சந்திச்சி மனக்குமுறலை கொட்டப்போவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. இதற்கிடையில் ஒரு கூட்டத்தில் நடந்ததையே உங்களால் பொறுத்துக்ெகாள்ள முடியலையே. எங்களையெல்லாம் எப்போதுமே கீழ தான வச்சியிருக்காங்கன்னு மாஜி எம்எல்ஏக்கள் கெத்தா சொல்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் சுற்றுப்பயணத்திற்கு கூட்டம் காட்ட அழைச்சிட்டு வருபவர்களுக்கு கொடுக்க கொடுத்த ‘விட்டமின் ப’வை ஆட்டைய போட்டுட்டாராமே நிர்வாகி...’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெல்டா மாவட்டத்தில் சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகி ஒருவரிடம், தலைமையிடத்தில் இருந்து எல் கணக்கில் ‘விட்டமின் ப’ கொடுக்கப்பட்டதாம்...
இந்த ‘விட்டமின் ப’ மூலம் டெல்டா மாவட்டம் முழுவதில் இருந்து அழைத்து வருபவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என தலைமையிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததாம்.. ஆனால் முக்கிய பொறுப்பில் உள்ள அந்த முக்கிய நிர்வாகி, அனைத்தையும் ஆட்டைய போட்டு இருந்ததோடு ‘விட்டமின் ப’ கொடுத்த விவரம் குறித்து முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிவிக்க வில்லையாம்..
தற்போது, இந்த விஷயம் டெல்டா மாவட்டம் முழுவதும் கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் வரையிலும் கசிந்துள்ளதாம்.. முக்கியமாக, ‘விட்டமின் ப’ விவகாரத்தை சேலத்துக்காரரின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனராம்.. இந்த டாப்பிக் தான் டெல்டா மாவட்டம் முழுவதும் கட்சிக்குள்ளே அரசல்புரசலாக ஓடுகிறது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.