உயிரிழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிசெல்வதை தவிர்க்க வேண்டும்: வீடியோ வெளியிட்டு லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்
சென்னை: கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடியோவில் அவர் பேசியதாவது: கரூரில் நடந்த விபத்தை நினைத்து இதுவரை எனக்கு மனம் பதறிக் கொண்டிருக்கிறது. கூட்ட நெரிசல்களில் குழந்தைகளை கூட்டிச் செல்வதை பொதுமக்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எப்படி கூட்டம் இருக்கும், எந்த பகுதியில் நகர்வார்கள், என்ன பாதுகாப்பு முறைஇருக்கிறது என்று தெரியாமல் செல்லக்கூடாது.
அன்பான தமிழ் மக்களே எங்கு கூட்டம் இருந்தாலும் பாதுகாப்பை மட்டும் விட்டு விடக் கூடாது. குழந்தைகள், பெண்களால் அங்கிருந்து கடைசி நிமிடத்தில் ஓட முடியாது. நெரிசல் அதிகரிக்கும்போது அப்பகுதியில் இருந்து நகர்வது கடினமான விஷயம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம், பொதுமக்கள், காவல் துறை, இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் ஒற்றுமையாக இருந்து இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.