பயிர் சேதத்துக்கு ஒரு ரூபாய், ரூ.3, ரூ.21 என காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு : விசாரணைக்கு உத்தரவிட்ட ஒன்றிய அமைச்சர்
டெல்லி : பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ரூபாய், 3 ரூபாய், ரூ.21 என காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடு வசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது, பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம்வரை இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம். இந்நிலையில், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மகாராஷ்டிர விவசாயிகளிடம் வீடியோ கால் மூலம் அவர் கலந்துரையாடினார்.அப்போது, காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ரூபாய், 3 ரூபாய், ரூ.21 என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ,"இது, விவசாயிகளை கிண்டல் செய்வதுபோல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது, இவ்வாறு செய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்,"என்று தெரிவித்துள்ளார்.
