சென்னை: நீதிபதியை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் என்.விஜயராஜ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சனம் செய்யலாம், ஆனால் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளை விமர்சனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சட்டத்தின்பால் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதை விமர்சனம் செய்தால் அது நீதித்துறையில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் நீதிபதியை விமர்சிக்கலாம் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். எந்த சூழ்நிலையிலும் நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்யலாம், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்கள் மீது அதற்கு அடுத்த கட்டமாக உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிடலாமே தவிர பொதுவெளியில் சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற விஷயங்களில் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அல்லாமல் தலைமை நீதிபதியே தாமாக முன்வந்து குற்றவழக்கு தொடர முடியும்.
தற்போதைய இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அவர்கள் தாங்கள் செய்கிறது என்ன குற்றம் என்பது தெரியாமல் செய்கின்றனர். எல்லோரையும் விமர்சிப்பதுபோல தரம் தாழ்ந்தும் விமர்சிக்கின்றனர். இது தண்டனைக்குரிய குற்றம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால்தான் தற்போது விமர்சனம் செய்யும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டவுடன் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிடுகின்றனர். இளைஞர்கள் தவறு செய்தால் அதற்கு அவர்கள் மட்டுமே காரணம் இல்லை. அவர்களது பெற்றோர்களும் காரணம். பள்ளிகளில் ஆசிரியர்கள், கல்லூரிகளில் பேராசிரியர்கள் இதுபோன்ற விமர்சனங்கள் தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களும், பொது இடங்களிலோ, மேடைகளிலோ பேசும்போது நீதிபதிகளை விமர்சனம் செய்வது தவறு என்பதை இளைஞர்களுக்கு சுட்டிக் காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தவறு செய்வதை நிறுத்துவார்கள்.
இல்லாவிட்டால் எதை செய்தாலும், எந்த விமர்சனம் செய்தாலும் தவறு இல்லை என்று நீதிபதியையும், அவர்களது குடும்பத்தையும் விமர்சிப்பார்கள். இது முற்றிலும் தவறு. இவ்வாறு வழக்கறிஞர் விஜயராஜ் தெரிவித்தார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எவ்வளவு நாட்கள் ஆனாலும் தண்டனை கொடுக்க முடியும். உதாரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு நீதிபதிக்கே தண்டனை வழங்கும் நிலையில் நீதிபதிகளை விமர்சிப்பவர்களுக்கும் சிறை தண்டனை விதிக்க முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.