Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் சென்னையில் 20ம்தேதி கருத்தரங்கம்: சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

சென்னை: திமுக வழக்கறிஞர் அணி சார்பில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் வரும் 20ம்தேதி ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது. இதுகுறித்து, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாஜ அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திமுக சட்டத்துறையின் சார்பில் கடந்த 5ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களின் நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து, 6ம்தேதி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரத அறப்போராட்டமும் நடத்தப்பட்டது.  இந்நிலையில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கருத்தரங்கம் வரும் 20ம்தேதி மாலை 4 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கிறது.

இதில், ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இதை தொடர்ந்து, 21ம்தேதி 24 காலை 9 மணி அளவில் எழும்பூரில் உள்ள ஓட்டல் ரமடாவில் எனது தலைமையில் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மற்றும் சட்டத்துறை மாநில நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பேசுகின்றனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிறைவுரையாற்றுகிறார். இதற்கான அழைப்பு அந்தந்த மாவட்ட, மாநகர அமைப்பாளர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 27ம்தேதி மாலை 4 மணியளவில் தென் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சித்த மருத்துவமனை அருகில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தென் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில், எனது தலைமையில், சட்டத்துறைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.