குற்றவாளியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பீர், நடன மங்கையுடன் குத்தாட்டம்: இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட்
காசியாபாத்: உத்தரபிரதேசத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் பிறந்தநாள் விழாவில் மது அருந்தி நடன மங்கையுடன் ஆட்டம் போட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் விழாவில், 4 காவலர்கள் மது அருந்தி நடன மங்கையுடன் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட 4 காவலர்களும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக சாகிபாபாத் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான இர்ஷாத் மாலிக்கின் பிறந்தநாள் விழா, கடந்த திங்கட்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் சாகிபாபாத் எல்லை புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆசிஷ் ஜாதோன் மற்றும் மூன்று காவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். அங்கு அவர்கள், கையில் பீர் பாட்டில்களுடன் நடன மங்கையுடன் உற்சாகமாக நடனமாடியுள்ளனர். 22 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, டிரான்ஸ் ஹிண்டன் பகுதி காவல்துறை துணை ஆணையர் நிமிஷ் படேல், இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை மீறியது குறித்து உள் விசாரணைக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.