மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. விமானத்தில் செல்ல வந்த பயணிகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது பைசல் (30) என்பவர், இந்த விமானத்தில் சுற்றுலா பயணியாக அபுதாபி செல்ல வந்திருந்தார். அவருடைய சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதிக்க போது, சூட்கேஸ் ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், முகமது பைசல் சூட்கேஸை திறந்து சோதனையிட்டனர்.
அதில் ரூ.18 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து முகமது பைசல் பயணத்தை ரத்து செய்து, அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்தை பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்க அதிகாரிகள், முகமது பைசலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், முகமது பைசல் இந்தப் பணத்தை கூலிக்காக எடுத்து சொல்லும் கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. மேலும் கணக்கில் இல்லாத இந்த பணத்தை இவரிடம் கொடுத்து அனுப்பிய ஆசாமி யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.