திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்
திருச்சி: திருச்சியில் செல்போன் பறித்து தப்பிய திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாநகரில் திருட்டு, செல்போன், செயின் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 1.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் அருகே வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர், அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்து சத்திரம் பஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை விரட்டி சென்றனர்.
அப்போது அந்த வழியே பணி முடிந்து மப்டியில் வீட்டுக்கு புறப்பட்ட கோட்டை போலீஸ் நிலைய போலீஸ்காரர் அப்துல்காதர்(35), போலீசார் ஓடுவதை பார்த்து அவரும் அந்த வாலிபர்களை விரட்டி சென்றார். அப்போது திருடர்கள் கையிலிருந்த கத்தியால் அப்துல்காதரின் காது மற்றும் கையில் சரமாரி வெட்டினர். ஆனாலும், அவர்களை மற்ற போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் காயமடைந்த போலீஸ்காரரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ரங்கம் புலிசரவணன்(21), சாரதி(21) மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து இதுபோல் வேறு யாரிடமும் கைவரிசை காட்டினார்களாக என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.