புதையலில் கிடைத்ததாக கூறி போலி நகையை விற்பனை செய்து கடைக்காரரிடம் ரூ.5 லட்சம் அபேஸ்: 3 நாளில் 2வது சம்பவம்; மர்ம கும்பலுக்கு வலை
தாம்பரம்: சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த குமாரசுவாமி (59), அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி அவரது கடைக்கு வந்த வட மாநில வாலிபர் கிஷோர் என்பவர், பொருட்களை வாங்கிக் கொண்டு, சில்லறையுடன் சில வெள்ளி நாணயங்களையும் கொடுத்துள்ளார். இதை பார்த்த குமாரசுவாமி, இது எப்படி உனக்கு கிடைத்தது என கேட்டபோது, கட்டிட வேலைக்காக, பள்ளம் தோண்டியபோது வெள்ளி மற்றும் தங்க நகைகளுடன் புதையல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு 2 தங்கைகள் உள்ளதாகவும், அவர்களுக்கு திருமணம் செய்ய பணம் தேவைப்படுவதால், இந்த நகைகளை விற்பனை செய்ய உள்ளேன். உங்களுக்கு வேண்டுமென்றால் கூறுங்கள், என சொல்லவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் கடந்த 17ம் தேதி அவரது கடைக்கு வந்த அவர், ஒன்றரை கிலோ எடையுள்ள மாலை ஒன்றை தங்கம் என கூறியுதுடன், அதில் இருந்து 2 தங்கத்தை பிரித்து எடுத்து கொடுத்து, சந்தேகம் இருந்தால், சோதனை செய்து பாருங்கள், என கூறி சென்றுள்ளார். அதன்படி, குமாரசாமி அருகிலுள்ள நகைக்கடையில், அதை சோதனை செய்தபோது, அது உண்மையான தங்கம் என தெரியவந்தது. பின்னர், கடந்த 22ம் தேதி குமாரசாமியை தொடர்பு கொண்ட கிஷோர், ரூ.20 லட்சம் கொடுத்துவிட்டு நகையை வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். இறுதியாக, ரூ.5 லட்சத்திற்கு நகையை விற்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து குமாரசாமியை கடந்த 24ம் தேதி குரோம்பேட்டை ரயில் நிலையம் வரவழைத்து, ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு, நகையை விற்பனை செய்துள்ளார். அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் போலி நகைகளை கொடுத்து பணத்தை ஏமாற்றியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டது குறித்து, கடந்த 27ம்தேதி செய்திகள் வெளியானதை பார்த்தபோது அந்தப் பெண் கிஷோருடன் கிண்டியில் தங்களை வந்து சந்தித்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
இதனால், சந்தேகமடைந்த குமாரசாமி, தான் கிஷோர் என்ற நபரிடமிருந்து பெற்று வைத்திருந்த நகையை அருகிலுள்ள நகை கடைக்கு எடுத்துச்சென்று பரிசோதித்து பார்த்தபோது, அந்த நகை போலியான நகை என தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன், மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் இருந்து இதேபோல் பண மோசடி நடைபெற்ற நிலையில், தற்போது மற்றும் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.