புகார் கொடுக்க வந்தவரை காதல் வலையில் வீழ்த்தினார்; 15 ஆண்டு குடும்பம் நடத்தி ஏமாற்றிய இன்ஸ்பெக்டர்: புதுச்சேரி டிஜிபியிடம் பெண் புகார்
புதுச்சேரி: பதினைந்து ஆண்டுகளாக குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக புதுச்சேரி உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீது டிஜிபியிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகாரளித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையில் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜான்கென்னடி (50). திருமணமாகாதவர். போக்குவரத்து காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த போது புகார் கொடுக்க வந்த வில்லியனூர் நவசாந்தி வீதியை சேந்த மலர் (39) என்ற பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, கடந்த 15 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மலரிடம் இருந்து சொத்து, பணம், நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக இன்ஸ்பெக்டர் கென்னடி மீது டிஜிபி ஷாலினிசிங்கிடம் நேற்று புகார் மனுவை மலர் அளித்துள்ளார்.
அவரது புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள சிவ ஜான்சன் கென்னடி, கடந்த 2010ல், மேற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். அப்போது என்னுடைய சகோதரர் ராஜேந்திரன், சேதராப்பட்டு அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்நிலையம் சென்றபோது, இவ்வழக்கில் எனக்கு உதவி செய்வதாக கூறி பழகியதோடு என்னிடம் உறவு வைத்துக்கொண்டார். அப்போது கணவர் ரமேஷை விட்டு பிரிந்து தனியாக வா, உன் பிள்ளைகளையும் நான் பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன், என்றார். அவருடைய வாக்குறுதியை நம்பி அவருடன் சென்றேன். அப்போது எனக்கு வீட்டில் வைத்து தாலி கட்டினார். அப்போதிலிருந்து உணர்வு மற்றும் உடல்ரீதியாக என்னை பயன்படுத்திக்கொண்டு எனது 15 பவுன் நகைகள், என்னுடைய சொத்து பத்திரங்களை வாங்கிக்கொண்டார். எங்களது உறவை தெரிந்து கொண்ட எனது கணவர் ரமேஷ் என்னை விட்டு பிரிந்து, அவரது சொந்த ஊரான செஞ்சிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், என் குழந்தைகளை வைத்து கென்னடி அடிக்கடி மிரட்டி வந்தார். மேலும் தவறான நோக்கத்தோடு எனது மகளை அணுகியதால், மன உளைச்சலுக்கு உள்ளான 17 வயதுடைய எனது மூத்த மகள் கடந்த 2017ல் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நான் காவல்நிலையத்தில் புகாரளிக்க முடிவு செய்தபோது என்னுடைய வாழ்க்கை மற்றும் வேலை பறிபோய் விடும், என கென்னடி என்னிடம் கெஞ்சினார். அப்போது தனக்கு அரசியல் பலம், ரவுடிகள் செல்வாக்கு உள்ளது. உன்னை கொலை கூட செய்துவிடுவேன் என மிரட்டினார்.
இதில் பயந்துபோன நான், மற்ற குழந்தைகள் நலன் கருதி, எனது மூத்த மகள் தேர்வில் தோல்வியை தழுவியதால் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொய் சொன்னேன். கென்னடி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டார். இதில் பயந்து போன எனது இரண்டாவது மகள் தன்னுடைய தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது அங்கு நடந்த ஒரு விபத்தில் இறந்துவிட்டார். கென்னடி மிரட்டல்களே இரு மகள்களின் சாவுக்கு காரணமாகிவிட்டது.
கடந்த ஜூன் 3ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்து தகாத வார்த்தைகளால் என்னிடம் பேசினார். தொடர்ந்து ரெட்டியார்பாளையத்தில் உள்ள கென்னடி வீட்டுக்கு சென்றபோது, வேறு ஒரு பெண்ணிடம் கென்னடி நெருக்கமாக இருந்ததை பார்த்துவிட்டேன். யார்? என்று கேட்டபோது, வீட்டு வேலை செய்ய வந்ததாக தெரிவித்தார். இருவரின் நெருக்கத்தை குறித்து கேட்டபோது, கென்னடியும், அந்த பெண்ணும் சேர்ந்து சரமாரியாக என்னை தாக்கினர். இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தால், சொத்து பத்திரங்களை அழித்துவிடுவேன் என மிரட்டினார். அவர் மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, என்னுடைய கடைசி மகன், தொலைபேசி மூலம் என்னை அழைத்து, கென்னடி தன்னை துன்புறுத்துவதாக கூறி வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதனால் பயந்து போன, நான் புகாரளிக்காமல் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன், அப்போது வெள்ளைநிற காரில் வந்த, கென்னடியின் சகோதரர் பிரகாஷ், என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அடித்து துன்புறுத்தினார்.
இதில் காயமடைந்த என்னை எம்எல்சி (மருத்துவ சட்ட வழக்கு) போடவிடாமல், மூலக்குளத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் அழைத்து சென்று, செல்வாக்கை பயன்படுத்தி மருத்துவரை எனக்கு சிகிச்சையளிக்க வைத்தார். தொடர்ந்து கென்னடி மூலம் படும் கஷ்டங்களை, ஒருமாதம் கழித்து என்னிடம் கூறிவிட்டு என் மகன் எங்கேயோ சென்றுவிட்டான். இத்தனை காலம், அவரின் அதிகாரத்தை பயன்படுத்தியும், அவரின் மிரட்டலுக்கு பயந்தும் புகாரளிக்காமல் இருந்தேன். காவல்துறை மீது நம்பிக்கை வைத்து இப்போது புகாரளித்துள்ளேன். எனக்கு உரிய நீதி வேண்டும். இத்துடன் கென்னடியுடன் பேசிய உரையாடல்கள், போட்டோக்களை இணைந்துள்ளேன். இன்ஸ்பெக்டர் கென்னடி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் மறுப்பு
பெண் புகார் குறித்து இன்ஸ்பெக்டர் கென்னடியிடம் கேட்டபோது, ‘அந்த பெண்ணின் மகன் சிறையில் இருப்பதால், அவரை விடுவிக்க உதவி கோரினார். அதனை நான் செய்யாததால், என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த புகார்களை சட்டரீதியாக சந்திப்பேன், என்னை பழிவாங்குவதற்காக, பின்னணியில் இருந்து சிலர் தூண்டி விடுகின்றனர். இந்த போட்டோ உண்மையில்லை. அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது,’ என்றார்.
காவல்நிலையம் வந்த பல பெண்களுடன் தொடர்பு
இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த மலர் கூறுகையில், ‘என்னைபோல் இனி எந்தபெண்ணும், அவரிடம் ஏமாந்து போகக்கூடாது. தற்போது விவாகரத்து கேட்டு வந்த பெண்ணிடம் கென்னடி நெருக்கமாகவுள்ளார். இதுமட்டுமல்ல, இவர் காவல்நிலையம் மாறும்போதெல்லாம் அங்கு, உதவி கேட்டு வருபவர்களை தன் இச்சைக்கு ஆளாக்கிக்கொள்வார். இது போல் மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவருகிறது. எனது மகன் மதன் கிருஷ்ணா மீது செய்யாத தவறுக்கு எப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இவரால் என் குடும்பம் சீரழிந்துவிட்டது. நான் நடுத்தெருவில் நிற்கிறேன். தற்போது எனக்கும் என் பிள்ளையின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களுக்கு எது நடந்தாலும், கென்னடியின் குடும்பம்தான் காரணம்’ என்றார்.
இரவு பணியின்போது வீட்டின் சுவர் ஏறி குதித்து இன்ஸ்பெக்டர் லீலை
பெங்களூருவை சேர்ந்த மலருக்கும் செஞ்சியை சேர்ந்த அவரின் தாய்மாமன் ரமேசுக்கும், 1995ல் திருமணம் நடந்தது. பின்னர் புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள சோப்பு கம்பெனியில் ரமேஷும், அவரது மைத்துனர் ராஜேந்திரனும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். 2010ல் நடந்த சாலை விபத்தில் ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இவ்வழக்கில் சாட்சி கையொப்பம் இட காவல்நிலையம் சென்றபோது, மலரின் அழகில் மயங்கிய கென்னடி, தொலைபேசி எண்ணை வாங்கி, இரவு பகலாக காதல் பேசியுள்ளார். தொடர்ந்து தொண்டமாநத்தத்தில் வாடகை வீட்டில் இருந்த மலர் குடும்பத்தை, தான் பணிபுரியும் வில்லியனூர் போக்குவரத்து காவல்நிலையம் அருகில், புதிதாக வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். இரவு பணியின் போது மதில் சுவர் ஏறிகுதித்து வீட்டுக்குள் கென்னடி வந்து செல்வார். அப்போது மலரும், கென்னடியும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், குடும்பத்தைவிட்டு செஞ்சிக்கு சென்றுவிட்டார் என்று மலர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பலாத்காரத்தால் மகள் தற்கொலை?
மலர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், இன்ஸ்பெக்டர் கென்னடி என் பெரிய மகளை பலாத்காரம் செய்ததால்தான் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இன்ஸ்பெக்டர் உன் மகள் பிளஸ்-2 தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததால்தான் விஷம் குடித்து இறந்துவிட்டதாக என்னை மிரட்டி சொல்ல வைத்தார். அதன்படி அதிகாரத்தை பயன்படுத்தி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை பெற்றார். இவரால் என் குடும்பம் சீரழிந்துவிட்டது’ என கூறியுள்ளார்.