Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டார்ச்சர் செய்ததால் ஆத்திரம் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொழுந்தனை கொன்ற அண்ணி: உறவினர்கள் 5 பேருடன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. கடந்த ஜூன் 15ல் அந்த கிணற்றில் கை, கால், வாய் துணியால் கட்டப்பட்டு ஒரு ஆண் சடலம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாடிக்கொம்பு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாகி கிடந்தவர், திண்டுக்கல் பூத்தாம்பட்டியை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஜோதிமணி (35) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் பூத்தாம்பட்டி கோமதி (33), கோனூர் நடராஜன் (48), அவரது மனைவி நீலா (45) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வேடசந்தூர் கிழக்கு மாத்தினிபட்டியை சேர்ந்தவர் முருகன் (48). ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி கோமதி, 3 குழந்தைகளுடன் பூத்தாம்பட்டியில் வசித்து வந்தார். முருகனின் 2வது சகோதரர் ஜோதிமணி (35). இவர் முருகனின் மனைவி கோமதி, குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருந்து வந்தார். அப்போது கோமதிக்கு உடல், மனரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை கோமதி பெற்றோரான நடராஜன் (55), நீலா (50), தங்கை கணவர் ஸ்டாலின் (30) ஆகியோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டாலின் தனது நண்பர்களான ஆரோக்கியசாமி (28), குட்டி முத்து (20) ஆகியோரை கூட்டு சேர்த்து கொண்டார். இவர்கள் திட்டப்படி கோமதி, ஜூன் 11ம் தேதி இரவு ஜோதிமணிக்கு உளுந்தங்களியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். ஆனால் ஜோதிமணி தூங்காமல் இருக்கவே மீண்டும் காபியில் 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். இதனால் மயக்க நிலைக்கு சென்ற ஜோதிமணியை, ஒரு டூவீலரில் இடையில் அமர வைத்து ஆரோக்கியசாமி, குட்டி முத்து அழைத்து சென்றனர். சம்பவ இடத்தில் கிணற்றில் கை, கால், வாயை கட்டி வீசி சென்றதும் ஜோதிமணி மூச்சுத்திணறி இறந்துள்ளார். இவ்வாறு கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பெண்கள் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.

* கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டிக்குள் கிடந்தது ஆண் சடலம்

திண்டுக்கல் - பழநி பைபாஸ் சாலையில் ராமையன்பட்டி அருகே பாலத்தின் கீழ் அட்டை பெட்டியில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அட்டை பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில் கொலையானவர் திண்டுக்கல் வஉசி காலனியை சேர்ந்த குபேந்திரன் (58) என்பது தெரியவந்தது. இவர் எதற்காக கொலையானார்? இதில் ஈடுபட்டது யார் என்பது குறித்து, சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.