Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி இல்லத்தில் மேலும் ஒரு மூதாட்டி சாவு: பலி 4 ஆனது; சீல் வைப்பு; உரிமையாளர் கைது

நெல்லை: தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரு மூதாட்டி உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்ததையடுத்து முதியோர் இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 11ம் தேதி இரவு அசைவ உணவு சாப்பிட்ட பலருக்கு வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (42), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (60) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதைதொடர்ந்து அந்த இல்லத்தில் இருந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேலும் 9 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் நேற்று அதிகாலை மதுரையைச் சேர்ந்த தனலெட்சுமி (80) என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ஏற்கனவே சமையல் அறையில் உள்ள உணவு தயாரிப்பு பொருட்களை தனித்தனியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்குப்பின் முதியோர் இல்லத்தை பூட்டி சீல் வைத்தனர். அங்குள்ளவர்கள் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர். உணவு மாதிரி ஆய்வின்படி பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் என்பதை குறிக்கும் பிஎன்எஸ் 280, குற்றத்தை தூண்டுதல், குற்றசதி ஆகியவற்றை குறிக்கும் பிஎன்எஸ் 105 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு முதியோர் இல்ல உரிமையாளரான கீழபட்டாக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பவரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘முதியோர் இல்லத்தில் சுமார் 40 பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஏறக்குறைய 20 பேருக்கு உடல்நிலை பாதிப்பு அறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சிலர் உடல்நிலை தேறி திரும்பியுள்ளனர். நேற்று காலை நிலவரப்படி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்’ என்றனர்.