திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி மரணம் குறித்து சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். நேற்று மாலை 3.30 மணிக்கு 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு சென்று அனைத்து போலீசாரையும் வெளியேற்றிவிட்டு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் விசாரணை செய்தனர். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை மானிட்டரில் ஆய்வு செய்தனர்.
நிகிதா புகார் செய்த ஜூன் 27ம் தேதியில் இருந்து பதிவான அனைத்து சிசிவிடிக்களையும் ஆய்வு செய்தனர். இதனிடைய சிபிஐ குழுவினரில் ஒருவர் மடப்புரம் கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்து அஜித்குமாருடன் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் அருண், அஜித் நண்பர்கள் பிரவீண், வினோத், அஜித்தின் தம்பி நவீன்குமார், கோயில் ஊழியர் கார்த்திகைவேல் உட்பட 5 பேரும் இன்று (ஜூலை 18) மதுரை சிபிஐ அலுவலகத்தில் 10 மணிக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்கினார். இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையிலுள்ள காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ போலீசார் முடிவெடுத்துள்ளனர். இதற்காக அவர்களை காவலில் எடுக்க அனுமதி கோரி திருப்புவனம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மனு செய்ய முடிவு செய்துள்ளனர்.